504 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை:

க்ளெனேகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை சாதனை

· 3 வயது சிறுமிக்கு துவங்கி 68 வயது முதியவர் வரை செய்துள்ளது
சிறுநீரக தானம் செய்யும் 47 சதவீத தாய்மார்கள், உடல் உறுப்பு தானம் குறித்த போதிய விழிப்புணர்வை பெறவில்லை

சென்னை, மார்ச் 28– 2023:504 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளதாக க்ளெனேகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை அறிவித்துள்ளது. இம்மருத்துவமனையின் சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சைப் பிரிவு இன்றுவரை 22 குழந்தைகள் முதல் 482 பெரியவர்கள் வரை என 504 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது. 482 பெரியவர்களைப் பொறுத்தவரை அதில் 156 பெண்களும், 348 ஆண்களும் அடங்குவர். இந்த சாதனையை கொண்டாடும் விதமாக இம்மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது. அதில் சிறப்பு விருந்தினராக உலக வங்கி உதவி பெறும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் திட்ட இயக்குனர் தென்காசி எஸ். ஜவகர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சிறுநீரகம் தானம் வழங்கியவர்களும் அதனை பெற்றுக் கொண்டவர்களும் பங்கேற்றனர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு தங்கள் வாழ்க்கை எப்படி இயல்பு நிலைக்குத் திரும்பியது என்பதைப் பற்றி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பேசினார்கள்.

இது குறித்து க்ளெனேகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி அலோக் குல்லர் கூறுகையில், கடந்த 2009–ம் ஆண்டு எங்கள் மருத்துவமனையில் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அன்று முதல் எங்கள் மருத்துவமனையில் உள்ள சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சைத் துறை 500க்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்கள் மருத்துவமனைக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்பதோடு, உலக அளவிலும் இது சாதனையாக உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இந்தியாவைப் பொறுத்தவரை இதுபோன்ற ஒரு சாதனையை ஏற்படுத்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல. சிறுநீரக மாற்று சிகிச்சையில் நாம் ஏற்கனவே முன்னணியில் இருந்தாலும், வளர்ந்த நாடுகளை விட பின்தங்கியே இருக்கிறோம். சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு வரும் பலருக்கு அது தொடர்பான போதிய விழிப்புணர்வு இல்லை. இதை கருத்தில் கொண்டு சிறுநீரகம் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் டாக்டர் அலோக் குல்லர் தெரிவித்தார்.

இம்மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை தலைமை டீன் டாக்டர் முருகானந்தம் கூறுகையில், எங்கள் மருத்துவமனை சார்பில் செய்யப்பட்ட 504 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையைப் பொறுத்தவரை அதில் 208 சிறுநீரகங்கள் இறந்தவர்களிடம் இருந்தும், 296 சிறுநீரகங்கள் உறவினர்களிடம் தானமாக பெற்றும், 35 சிறுநீரகங்கள் ‘கிரவுட் பண்டட்’ முறையில் நிதி உதவி பெற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உடல் உறுப்பு தானத்தை தேசிய அளவில் அதிகரிக்கச் செய்வது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். மக்கள் விருப்பத்துடன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வரும்போது மட்டுமே இது சாத்தியமாகும். தற்போதைய சூழலில், சிறுநீரக தானம் பெறுபவர்களுக்கு அவரது குடும்பத்தினரும், உறவினர் மட்டுமே தானம் செய்கிறார்கள். மேலும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன் வந்து இந்த விஷயத்தில் எங்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து புள்ளியியல் அடிப்படையில் அவர் பேசுகையில், எங்கள் மருத்துவமனையில் மேற்கொண்ட 504 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் 47 சதவீத சிறுநீரகங்கள் அவரவர்களின் அன்னையிடம் இருந்து பெறப்பட்டவையாகும். 19 சதவீதம் கணவன் அல்லது மனைவியிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. 12 சதவீதம் சகோதரியிடம் இருந்தும், 8 சதவீதம் சகோதரரிடம் இருந்தும் 14 சதவீதம் மற்றவர்களிடம் இருந்தும் பெறப்பட்டுள்ளது. இதில் மிகவும் வயது குறைவான 20 வயது இளம் பெண்ணிடம் இருந்தும், வயது அதிகமான 65 வயது ஆண் ஒருவரிடம் இருந்தும் பெறப்பட்டு இருக்கிறது. சிறுநீரகத்தை பெற்றுக் கொண்டவர்களைப் பொறுத்தவரை 3 வயது பெண் குழந்தையும், 68 வயது ஆணும் அடங்குவர் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சாதனை குறித்து இம்மருத்துவமனையின் மூத்த ஆலோசகரும், சிறுநீரக மாற்று சிகிச்சை நிபுணருமான டாக்டர் முத்துகுமார் கூறுகையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையைப் பொறுத்தவரை அனைத்தையும் வெற்றிகரமாக செய்வது என்பது மிகவும் கடினமான காரியமாகும். எங்கள் மருத்துவமனையில் மிகவும் அரிதான மற்றும் சவாலான பல்வேறு நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்துள்ளோம். உதாரணமாக, நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு மற்றும் நாள்பட்ட சிறுநீரக காயம் மற்றும் சிறுநீரக செயல்பாட்டில் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு அதிக ஆபத்துள்ள மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதேபோன்று கட்டுப்பாடற்ற உயர் ரத்த அழுத்தம், குறைந்த கொள்ளளவு கொண்ட சிறுநீர்ப்பை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்த 17 வயது சிறுவனுக்கு, எங்கள் மருத்துவமனை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளது. இதுபோன்ற சவால் நிறைந்த பல்வேறு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

மேலும் டாக்டர் முத்துகுமார் கூறுகையில், ரிப்ராக்டரி அனீமியா மற்றும் பைசிட்டோபீனியா, நீரிழிவு பாலிநியூரோபதி ஆகிய பிரச்சினைகள் இருந்த 45 வயதான ஆண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதோடு, பிறப்பிலேயே முதுகுத்தண்டு குறைபாடுடன் பிறந்த 22 வயது ஆணுக்கும், வகை 1 நீரிழிவு, நாள்பட்ட சீறுநிரக பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினையால் பாதிக்கப்பட்ட 30 வயது பெண்ணுக்கும் இங்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என்றும் டாக்டர் முத்துகுமார் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *