காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் 1 தங்கம், 1 வெண்கலம் வென்ற பவானிதேவிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

சென்னை, ஆக.15

சென்னையை சேர்ந்த சர்வதேச வாள்வீச்சு வீராங்கனையான சி.ஏ.பவானி தேவி லண்டனில் நடைபெற்ற வாள்வீச்சு காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் 1 தங்கம், 1 வெண்கலம் என 2 பதக்கங்களை வென்றுள்ளார். காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் இவர் வென்ற 2வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. காமன்வெல்த் கேம்ஸில் இடம்பெறாத இவ் விளையாட்டு ஒவ்வொரு முறையும் காமன்வெல்த் கேம்ஸை தொடர்ந்து நடத்தப்படுகிறது.

இதன்படி லண்டனில் ஆகஸ்ட் 9 முதல் 20ஆம் தேதி வரை காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சி ஏ பவானி தேவி, தனிநபர் சேபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வீராங்கனை வாசிலேவா வெரோனிகாவை 15க்கு 10 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றார்.

கடந்த முறை 2018 இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்றுள்ள பவானி தேவி இம்முறை லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதோடு பவானிதேவி பெண்கள் அணி சேபர் பிரிவிலும் பங்கேற்றார். இதில் இந்திய பெண்கள் அணி முதன்முதலாக வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. அதில் பவானிதேவியும் பங்கேற்று வெண்கலம் வென்றார்.

இதன்மூலம் தனிநபர் பிரிவில் 1 தங்கம், அணி பிரிவில் 1 வெண்கலம் என 2 பதக்கங்களை கைப்பற்றி இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றதன் மூலம் இந்திய வாள்வீச்சு வரலாற்றில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரரான சி ஏ பவானி தேவி, லண்டன் காமன்வெல்த் வாள் வீச்சு போட்டியில் 2 பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வீராங்கனை சி ஏ பவானி தேவி, லண்டனில் இருந்து இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தார். அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வேளச்சேரி நீச்சல் குள வளாக அதிகாரி பிரேம்குமார் தலைமையில் அலுவலர்கள், வாள் வீச்சு விளையாட்டு சங்க பிரதிநிதிகள் கருணாசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள், வீரர் – வீராங்கனைகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

பின்னர் பவானிதேவி நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவிற்கு பதக்கம் வென்று பெருமை சேர்த்ததற்கு முதன்முதலாக எனது குடும்பத்தினருக்கும், தமிழக அரசிற்கும், எஸ்.டி.ஏ.டி.க்கும், நான் பணியாற்றும் தமிழக மின்சார வாரியத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்ததாக பாரிஸ் ஒலிம்பிக்கிலும் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்பது ஆசை. இது சாதாரண விஷயம் அல்ல. அதற்காக கடுமையாக போராட வேண்டும். கடுமையான பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஏராளமான போட்டிகளில் பங்கேற்று தகுதி பெற வேண்டும். இதற்கான தகுதிப்போட்டிகள் வருகிற ஏப்ரல் மாதம் துவங்குகிறது. 12க்கும் மேற்பட்ட தகுதிப்போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.

இந்தியாவில் வாள்வீச்சு விளையாட்டு இப்போது அதிகமாக பிரபலமாகி வருகிறது. இதற்காக இந்திய வாள்வீச்சு சம்மேளனம், மத்திய அரசு ஆகியவை அதிக அக்கறை எடுத்து செயல்படுகிறது. இதனால் நல்ல முன்னேற்றத்தை காண முடிகிறது. பெண்களுக்கென்று தனியாக லீக் போட்டிகள் துவங்கி சமீபத்தில் முதன்முறையாக டெல்லியில் நடத்தப்பட்டது. இதில் நிறைய பேர் பங்கேற்றனர்.

Êசமீபத்தில் துருக்கியில் நடைபெற்ற உலக கோப்பை வாள்வீச்சில் இந்திய அணிக்காக சேபர் பிரிவுக்கு மட்டுமே 12 பேர் பங்கேற்றது பெரிய விஷயமாகும்.

அதே போல் சமீபத்தில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 1,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றது இந்த வாள்வீச்சு விளையாட்டுக்கு கிடைத்துவரும் வரவேற்பை காட்டுகிறது.

இதற்காக உழைத்துவரும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் விளையாட்டு அமைப்புகள் அனைத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு பவானிதேவி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *