சலீம் ஸ்னூக்கர் அகாடமி மாணவர்கள் அனுபமா, லட்சுமிநாராயணன் உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பு
சென்னையிலுள்ள சலீம் ஸ்னூக்கர் அகாடமியில் பயிற்சி பெற்றுவரும் அனுபமா ராமச்சந்திரன், லட்சுமிநாராயணன் ஆகியோர் ருமேனியா நாட்டில் நடைபெறும் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
சலீம் ஸ்னூக்கர் அகாடமி, தமிழ்நாடு மாநில பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சங்கத்தின் அங்கீகாரத்துடன் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் துவங்கப்பட்டது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்னூக்கர் விளையாடி அதில் பலமுறை மாநில சாம்பியன் பட்டம் வென்றவரும், ஏறக்குறைய 6 முறை இந்தியா நெம்பர் 3 இடம்பிடித்து பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்றவரும், இங்கிலாந்தில் சர்க்யூட் போட்டியில் ஆடியவரும், தான் பங்கேற்ற முதல் தேசிய போட்டியில் செஞ்சுரி ஸ்கோர் செய்து (102 புள்ளிகள்) லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றவருமான எஸ்.ஏ.சலீம், இந்த அகாடமியை நடத்தி வருகிறார்.
ஸ்னூக்கர் விளையாட்டில் பல சர்வதேச வீரர், வீராங்கனைகளை உருவாக்க வேண்டும் என்ற லட்சியக்கனவுடன் துவங்கப்பட்ட இந்த அகாடமி அந்த இலக்கை இப்போது நெருங்கியுள்ளது. சலீம் ஸ்னூக்கர் அகாடமியில் பயிற்சி பெற்றுவரும் அனுபமா ராமச்சந்திரன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகிய இருவர் ருமேனியா நாட்டிலுள்ள புகாரெஸ்ட் நகரில் ஆகஸ்டு 15ம் தேதி துவங்கும் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
16 வயதுக்குட்பட்ட சிறுமியர் பிரிவில் 2017ம் ஆண்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற அனுபமா ராமச்சந்திரன், தமிழகத்திலிருந்து ஸ்னூக்கர் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் பெண்மணி என்ற சாதனைக்கு சொந்தக்காரர். கடந்த சில ஆண்டுகளாக பயிற்சியாளர் சலீமிடம் தீவிர பயற்சி மேற்கொண்டுவரும் இவர், ருமேனியாவில் நடைபெறும் போட்டியில் 21 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் பங்கேற்கிறார்.

இதனைத்தொடர்ந்து வருகிற அக்டோபர் மாதம் மலேசியாவில் நடைபெறும் பெண்கள் 6 ரெட் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும், நவம்பர் மாதம் துருக்கியில் நடைபெறும் பெண்கள் 15 ரெட் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியிலும் இந்திய அணிக்காக பங்கேற்கிறார்.
பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் விளையாட்டில் பலமுறை மாநில சாம்பியன் பட்டம் வென்றுவரும் அனுபமா ராமச்சந்திரன், ஜூனியர் பிரிவில் 8 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றவர். 21 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் முதல்நிலை வீராங்கனையாக திகழும் அனுபமா ராமச்சந்திரன், சமீபத்தில் நடந்த தேசிய தேர்வு முகாமில் 119 பிரேக் சாதனை செய்து, இந்திய பெண்களில் இதுவரை யாரும் எட்டாத உயரத்தை எட்டியுள்ளார்.
வேலம்மாள் வித்யாஷ்ரம் (மாம்பாக்கம், சென்னை) பள்ளியில் 11ம் வகுப்பு படித்துவரும் மாணவர் லட்சுமி நாராயணன் கடந்த 2ஆண்டுகளாக சலீம் ஸ்னூக்கர் அகாடமியில் பயிற்சி பெற்று, தனது திறனை மென்மேலும் வளர்த்து இன்று உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கிறார்.
லட்சுமி நாராயணன் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான மாநில ரேங்கிங்கில் பில்லியர்ட்சில் 3வது இடமும், ஸ்னூக்கரில் 4வது இடமும் பிடித்து வருகிறார். 21 வயது பிரிவில் பில்லியர்ட்சில் மாநில நெ.2 ஆக திகழும் இவர் அகில இந்திய அளவில் டாப் 16ல் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

நடப்பு அகில இந்திய ரயில்வே சாம்பியனும், அகில இந்திய ஸ்னூக்கர் போட்டியில் 15 முறைக்கும் அதிகமாக பட்டம் வென்றவரும், சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக பலமுறை பங்கேற்றவருமான திலிப்குமார், 16 வயதுக்குட்பட்ட உலக சாம்பியன்ஷிப்பில் 2 முறை இந்தியாவுக்காக பங்கேற்றவரும், 21 வயதுக்குட்பட்ட பெண்கள் ஸ்னூக்கரில் இந்தியா நெ.5 வீராங்கனையாக திகழ்பவருமான ஆர்.டி.மோகிதா, 16 வயதுக்குட்பட்ட சிறுவர் ஸ்னூக்கர் பிரிவில் இந்தியா நெ.6 வீரராக திகழும் அப்துல் சைப் ஆகியோரும் சலீம் ஸ்னூக்கர் அகாடமியில் பயிற்சி பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.